மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான 2-ம் கட்ட கணினி முறை குலுக்கல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான 2-ம் கட்ட கணினி முறை குலுக்கல் நடைபெற்றது.
கரூர்
கணினி முறை குலுக்கல்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு, எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளுக்கான இரண்டாவது கணினி முறை குலுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான பொதுப்பார்வையாளரும், பட்டுவளர்ச்சித்துறை இயக்குனருமான சாந்தி ஆகியோர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 8 பேரூராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குப்பதிவு கருவி மற்றும் ஒரு கட்டுப்பாட்டுக்கருவி என்ற விகிதத்தில், முதலாவது கனிணி முறை குலுக்கல் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி நடைபெற்றது.
வாக்குப்பதிவு கருவி
ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தேவைப்படும் கருவிகளின் எண்ணிக்கையினை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான எண்ணிக்கையில் வாக்குப்பதிவு கருவி மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்ட இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலின்படி, கரூர் மாநகராட்சி, அரவக்குறிச்சி, புலியூர், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் உப்பிடமங்கலம் ஆகிய பேரூராட்சிகளிலும் தலா ஒருவர் வீதம் மொத்தம் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், போட்டியின்றி தேர்வாகியுள்ள வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அகற்றுவதற்கான கணினி முறை குலுக்கல் நேற்று நடைபெற்றது.
அனுப்பும் பணி
அதனடிப்படையில், தாந்தோன்றிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, கணினி முறை குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நீக்கப்பட்டு, மீதமுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.