எமனேசுவரம் போலீஸ் நிலையத்தில் மதுரை கைதி சாவு:தலைமறைவாக இருந்த போலீஸ்காரர், ராமநாதபுரம் கோர்ட்டில் சரண்
போலீஸ் நிலையத்தில் கைதி இறந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
ராமநாதபுரம்,
போலீஸ் நிலையத்தில் கைதி இறந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கைதி சாவு
மதுரையை சேர்ந்த ராமானுஜன் என்பவருடைய மகன் வெங்கடேசன் (வயது 26). இவர் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பரமக்குடி எமனேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில் அவர் இறந்ததாக புகார் எழுந்தது. |
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சப் - இன்ஸ்பெக்டர் முனியசாமி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். |
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், முனியசாமியை முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி பகுதியில் வைத்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அவர் தினமும் ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். |
3 பேர் தலைமறைவு
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு ஞானசேகரன், முதுகுளத்தூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் கிருஷ்ணவேல் மற்றும் சாயல்குடி தனிப்பிரிவு போலீஸ்காரர் கோதண்டராமன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். நீண்ட விடுமுறையில் பணியில் சேராமல் 3 பேரும் தலைமறைவாகவே இருந்து வந்தனர். |
இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஞானசேகரன், கிருஷ்ணவேல் ஆகியோர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். |
பின்னர் சிறையில் இருந்து வந்த இவர்களுக்கு ராமநாதபுரம் கோர்ட்டு ஜாமீன் அளித்ததுடன், சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி இவர்கள் இருவரும் கையெழுத்திட்டு வருகின்றனர். |
கோர்ட்டில் ஆஜர்
இந்த வழக்கில் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்து வந்த மற்றொரு போலீஸ்காரர் கோதண்டராமன் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் அவரும் நேற்று காலை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2-வது கோர்ட்டில் நீதிபதி (பொறுப்பு) முல்லை முன்னிலையில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வருகிற 14-ந்தேதி வரை முதுகுளத்தூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். |
போலீசாரால் தேடப்பட்டு வந்த 3 போலீஸ்காரர்களில் 2 பேர் சரண் அடைந்து ஜாமீன் கிடைத்த நிலையில் அதனை அறிந்து மற்றொருவரும் சரண் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
இந்த வழக்கில் 3 பேரும் சரண் அடைந்துள்ளதால் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். |