மேலும் 11 மீனவர்கள் நடுக்கடலில் சிறைபிடிப்பு; 3 படகுகளும் பறிமுதல்

ராமேசுவரத்தை சேர்ந்த மேலும் 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறைபிடித்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-08 16:54 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை சேர்ந்த மேலும் 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறைபிடித்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

11 மீனவர்கள் கைது


  ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை அந்நாட்டு கோர்ட்டு விடுவித்து 2 வாரமாகியும் இன்னும் அவர்கள் நாடு திரும்பவில்லை.

  இ்ந்த நிலையில் இலங்கை கடற்படை அத்துமீறி மேலும் 11 மீனவர்களை நடுக்கடலில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

   ராமேசுவரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

  இதனிடையே ராமேசுவரத்தை சேர்ந்த மணிகண்ட பிரபு, சேவியர், சகாய ராபின் ஆகிய 3 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றிருந்த ராஜா, சிலுவை, டிக்சன், செந்தூர்பாண்டி, ரமேஷ், மதியழகன், சங்கர், தங்கத்துரை, மற்றொரு ரமேஷ், மணிகண்டன், லிங்கம் ஆகிய 11 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறையில் அடைப்பு


  11 மீனவர்களும் நேற்று இலங்கையில் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 11 மீனவர்களையும் வருகிற 22-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த 11 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  இலங்கையில் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் ஏலம் விடப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது:-

  மீனவர்களின் வாழ்வாதாரம் படகுகள்தான். ஒரு படகை நம்பி 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. தமிழக மீனவர்களிடம் இருந்து பறித்த 100-க்கும் மேற்பட்ட படகுகளை, தமிழக அரசு மற்றும் மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு தொடர்ந்து ஏலம் விட்டு வருகிறது.. இதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

  இந்தநிலையில் ராமேசுவரத்தை சேர்ந்த 3 படகுகளுடன், 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது மீனவர்களின் வேதனையை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.

நடவடிக்கை


  எனவே இனியும் மத்திய-மாநில அரசுகள் அமைதி காக்காமல் வெளியுறவுத்துறை மந்திரி உடனடியாக இலங்கை அரசோடு பேசி, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் மற்றும் படகுகளையும் விரைந்து கொண்டு வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ------------



மேலும் செய்திகள்