இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலெக்டர் திவ்யதர்சினி பாராட்டு

தர்மபுரி மாவட்டத்தில் 2020 21-ம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ள 35 அரசு பள்ளி மாணவ மாணவிகளை கலெக்டர் திவ்யதர்சினி பாராட்டினார்.

Update: 2022-02-08 16:51 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 2020-21-ம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ள 35 அரசு பள்ளி மாணவ, மாணவிகளை கலெக்டர் திவ்யதர்சினி பாராட்டினார்.
அரசு பள்ளி மாணவர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 2020-21-ம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 27 மாணவ, மாணவிகள் பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். இதேபோன்று அரசு பள்ளிகளில் பயின்று 8 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு பல் மருத்துவக்கல்லூரிகளில் பி.டி.எஸ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். 
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 35 மாணவ, மாணவிகள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினார்.
முக்கிய கடமை
அப்போது கலெக்டர் பேசுகையில், நீங்கள் மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு உங்களுக்கு பக்கபலமாக விளங்கிய பெற்றோர்களின் பங்கை நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ படிப்பை முடித்து மக்களுக்கு சேவையாற்றுவதை முக்கிய கடமையாக கருத வேண்டும். மாணவர்கள் அனைவரும் மருத்துவ படிப்புகளை சிறப்பாக முடிக்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 35 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் புத்தகங்கள் மற்றும் ஸ்டெதஸ்கோப்பு கருவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சித்ரா விஜயன், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, நலப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், அரசு தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்