விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருத்தாசலம்,
கும்பாபிஷேகம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூதங்களை மையமாக கொண்டு அமையப்பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 6-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து மண்டல பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் மாசி மக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு வாய்ந்த மாசிமக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாசிமக கொடியேற்றம்
இதையொட்டி காலையில் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் 5 கொடி மரங்கள் முன்பு எழுந்தருளினர். இதையடுத்து மேளதாளம் முழங்க கொடி மரங்களுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
16-ந்தேதி தேரோட்டம்
மாசிமக பெருவிழாவையொட்டி தினந்தோறும் காலை, மாலை சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான விருத்தகிரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபச்சித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக திருவிழா வருகிற 13-ந் தேதியும், தேரோட்ட விழா 16-ந்தேதியும், 17-ந்தேதி சிகர நிகழ்ச்சியான மாசிமக தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 18-ந் தேதி தெப்பத்திருவிழாவும், 19-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 20-ந்தேதி விடையாற்றி உற்சவ ஆரம்ப நிகழ்ச்சியும், மார்ச் 1-ந்தேதி விடையாற்றி உற்சவம் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.