ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.
விழுப்புரம்,
ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதை மீண்டும் வழங்க வேண்டும், கடைகளில் பழுதடைந்துள்ள விற்பனை முனைய எந்திரங்களை உடனுக்குடன் வட்ட பொறியாளர்களே சரிசெய்து தர வேண்டும், பழுதடைந்த நிலையில் இருக்கும் ரேஷன் கடை கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், ரேஷன் கடை பணியாளர்களுக்கான ஊதியத்தை மாதத்தின் முதல் நாளே வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் சிறு விடுப்பு எடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருட்கள் வினியோகம் பாதிப்பு
மாவட்டத்தில் மொத்தம் 1,514 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் பகுதி நேர ரேஷன் கடைகளை தவிர்த்து நேற்று 1,112 ரேஷன் கடைகள் இயங்க வேண்டும். ஆனால் பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 850 ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன.
இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கோபிநாத், செயலாளர் சம்பத், பொருளாளர் ரஷீத், துணைத்தலைவர்கள் பழனிவேல், தட்சிணாமூர்த்தி, ஜெகதீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.