ஓமலூர் அருகே காதல் மனைவி கழுத்தை நெரித்துக்கொலை-எதுவுமே தெரியாதது போல் நாடகமாடிய கணவர் கைது

காதல் மனைவி கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார். எதுவுமே தெரியாதது போல் நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-07 22:11 GMT
ஓமலூர்:
காதல் மனைவி கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார். எதுவுமே தெரியாதது போல் நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.
காதல் திருமணம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பள்ளத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 35). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (26). இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரீத்தி (10), அருணி (8), குகன் (6) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. லட்சுமணன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாராம்.
படுக்கையில் பிணம்
சிறிது நேரம் கழித்து லட்சுமணன் வீட்டுக்கு வந்தார். அப்போது படுக்கையில் சரண்யா பிணமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன், சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சரண்யா குடும்பத்தினர் விரைந்து வந்தனர்.
இறந்து கிடந்த சரண்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த தீவட்டிபட்டி போலீசார் விரைந்து வந்தனர். சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீவட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கணவர் கைது
இதற்கிடையே சரண்யாவின் தம்பி நந்தகுமார் (24) தீவட்டிபட்டி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தன்னுடைய அக்காள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
சரண்யாவின் நெற்றியில் லேசான காயம் இருந்ததாக தெரிகிறது. எனவே லட்சுமணனை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அவர், தன்னுடைய காதல் மனைவியை அடித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவும், நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு பிறகு அடிக்கடி எங்கள் இடையே இடையே தகராறு இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்தேன். அப்போது என்னுடைய மனைவி தின்பண்டம் வாங்கி வர சொன்னார். நான் கடைக்கு சென்று தின்பண்டம் வாங்கி வந்தேன். ஆனால் அந்த தின்பண்டம் என்னுடைய மனைவிக்கு பிடிக்கவில்லை.
கழுத்தை நெரித்துக் கொன்றேன்
இதுதொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் நான் என்னுடைய மனைவியை கழுத்தை நெரித்து தரையில் அழுத்தினேன். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். உடனே நான் வீட்டை விட்டு வெளியே சென்றேன். பின்னர் வீட்டுக்கு வந்த நான், சரண்யா இறந்து கிடக்கிறார். எப்படி இறந்தார் என தெரியவில்லை என்று எதுவுமே தெரியாதது போல் சரண்யாவின் உறவினர்களிடம் கூறினேன்.
முதலில் அவர்கள் எனது பேச்சை நம்பினார்கள். ஆனால் போலீசாரின் விசாரணையில் என்னால் தப்ப முடியவில்லை. உண்மையை ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
காதல் மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்