ஜி.எஸ்.டி. இழப்பீடு; மத்திய மந்திரியிடம் பசவராஜ் பொம்மை கோரிக்கை
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு: மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜி.எஸ்.டி. இழப்பீடு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பசவராஜ் பொம்மை அவரிடம் கூறியதாவது:-
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு காலம் அடுத்த மாதத்துடன்(மார்ச்) முடிவடைகிறது. கொரோனா பரவல் காரணமாக கர்நாடகம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதனால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும்.
ரூ.5,030 கோடி நிதி
கடந்த 2 ஆண்டுகளாக கடன் அடிப்படையில் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதேபோல் மேலும் 3 ஆண்டுகளுக்கு இதை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. மீது கூடுதல் வரி மூலம் இந்த கடனை அடைக்கலாம். கல்யாண கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.5,030 கோடி நிதி ஒதுக்க வேண்டும். நாட்டிலேயே பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் வட கர்நாடக மாவட்டங்கள்தான் உள்ளன.
அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டு அந்த பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதியின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
இதையடுத்து மத்திய மந்திரி உள்துறை அமித்ஷாவை சந்தித்து பசவராஜ் பொம்மை பேசினார்.