பர்தா விவகாரத்தில் மாநிலம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் போராட்டம்
கர்நாடகத்தில் பர்தா அணிவதற்கு தடை விதிக்க கூடாது என்று மாவட்டம் வாரியாக முஸ்லிம் பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் பர்தா அணிவதற்கு தடை விதிக்க கூடாது என்று மாவட்டம் வாரியாக முஸ்லிம் பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பர்தாவிற்கு ஆதரவாக போராட்டம்
உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் தொடங்கிய போராட்டம் தற்போது மாநிலம் முழுவதும் பரவ தொடங்கிவிட்டது. சிக்கமகளூருவில் ஐ.டி.எஸ்.டி. பி.யூ. கல்லூரியில் பர்தா, காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களை வகுப்பறைக்குள் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதேபோன்று சிவமொக்கா, பாகல்கோட்டை, பீதர், பெலகாவி, விஜயாப்புரா, ஹாசன், மண்டியா, தாவணகெரே, தார்வார், பீதர் உள்பட 10 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பி.யூ. கல்லூரி மாணவர்கள், பர்தா மற்றும் காவி துண்டு அணிந்து வந்தனர். அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.
வளாகம் மற்றும் நுழைவுவாயில் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து மாணவர்கள் சிலர் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம், விடுமுறை அறிவித்து அனைவரையும் வெளியேற்றியது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க கல்லூரிகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
விஜயாப்புராவில் காலவரையற்ற விடுமுறை
இந்நிலையில் விஜயாபுரா மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்கள் பர்தா, காவி துண்டு அணிந்து வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. கல்லூரி பேராசிரியர்கள் அவர்களிடம் மாநில அரசின் உத்தரவை குறிப்பிட்டு, சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கூறினர். ஆனால் மாணவர்கள் கேட்கவில்லை. பர்தா மற்றும் காவி துண்டுடன்தான் அணிந்து வருவோம் என்றனர்.
இதனால் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்தனர். இதேபோன்று மண்டியாவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். மாநில அரசின் சீருடை நடைமுறை ஏற்று கொள்ள முடியாது. அரசு பிறப்பித்துள்ள உத்தரவை திருப்ப பெறவேண்டும் என்று கோஷமிட்டனர்.
முஸ்லிம் பெண்கள் போராட்டம்
பெலகாவி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது எங்கள் உரிமை, இதை யாரும் தடுக்க கூடாது, பா.ஜனதா அரசு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். இதனால் பெலகாவி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று ஹாசன், பீதர், சிவமொக்கா ஆகிய இடங்களிலும் முஸ்லிம் பெண்கள் போராட்டம் நடத்தினர். மாநில அரசு எங்கள் தனி மனித சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. முஸ்லிம் மாணவர்களின் உரிமையை பறிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. மாநில அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இன்று தீர்ப்பு
இருப்பினும் இன்று(செவ்வாய்க்கிழமை) முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் அது யாருக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்ட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர்.