பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா
ரிஷியூர் கிராமத்தில் பாரம்பரிய அறுவடை நெல் திருவிழா நடைபெற்றது. விழாவை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வட்டம் ரிஷியூர் கிராமத்தில் இயற்கை வேளாண் பண்ணையில் பாரம்பரிய கருப்பு கவுனி நெல் அறுவடை திருவிழா நடைபெற்றது. இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அறுவடை திருவிழாவை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழக அரசு பாரம்பரிய இயற்கை விவசாயிகளுக்கு பல சலுகைகளை வழங்க உள்ளது. இன்றைய கால சூழல் நாம் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் அனைவரும் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்யவேண்டும் என்றார். விழாவில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேளாண் பண்ணை மேலாளர் நக்கீரன், இயற்கை இந்திய தலைவர் சின்னையா நடேசன் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஈச்சங்கோட்டை தஞ்சை மாணவிகள், அரசு அதிகாரிகள், இயற்கை விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பாரம்பரிய முறையில் கதிர் அரிவாள்களை முன்னோர்களிடம் வைத்து வணங்கி ஆசி பெற்று மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் அணிவகுக்க விழிப்புணர்வு ஊர்வலமாக 5 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட பாரம்பரிய கருப்பு கவுனி நெல் அறுவடை வயலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோர் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்து அறுவடை திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து பாரம்பரிய முறையில் கதிர் அடிக்கப்பட்டு விதைநெல் எடுக்கப்பட்டது. முன்னதாக இயற்கை விவசாயி செந்தில் உமையரசி வரவேற்றார். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் ஷகிலாகணேசன் நன்றி கூறினார்.