நடுபனையனார் வாய்க்காலுக்கு புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

கூத்தாநல்லூர் அருகே வடபாதியில் நடுபனையனார் வாய்க்காலுக்கு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-02-07 18:05 GMT
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே வடபாதியில் நடுபனையனார் வாய்க்காலுக்கு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நடுபனையனார் வாய்க்கால் பாலம்
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்திலிருந்து மூலங்குடி செல்லும் சாலையில் இடையில்  வடபாதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி சாலையின் குறுக்கே நடுபனையனார் வாய்க்கால் செல்வதற்காக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தான் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளுக்கு அரசு பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை வடபாதிமங்கலம்-திருவாரூர் வழித்தடத்தை மையமாக கொண்டுள்ளதால் போக்குவரத்து மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. 
இடிந்து விழும் நிலையில் 
தற்போது வடபாதியில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட நடுப்பனையனார்  வாய்க்கால் பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் பாலத்தின் இரண்டு பக்கமும் உள்ள தடுப்பு சுவர்கள் வாய்க்காலில் சாய்ந்து விழும் நிலையிலும், பாலத்தின் நடுப்பகுதியில் தரைதளம் உடைந்து விழும் நிலையிலும் உள்ளது. மேலும் பாலத்தின் இரண்டு பக்கமும் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோர் சிலர் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். 
புதிய பாலம் கட்டித்தர வேண்டும்
எனவே சேதமடைந்த வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்து உயிர்சேதம் ஏற்படும் முன்பு இந்த  வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக பாலம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்