தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கு றைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
மதுக்கடை மாற்றப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் புதிதாக மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதுவை வாங்கிக்கொண்டு திறந்தவெளியில் வைத்து குடித்து விட்டு அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி செய்து வருகின்றனர். அந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ? என அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுக்கடையை மாற்றி அமைக்க நடவடிக்கை வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், ஆத்தூர்.
தார்ச்சாலை வேண்டும்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா மேலராதாநல்லூர் பஞ்சாயத்து காவாலக்குடி கிராமத்தில் உள்ள பெரியார் தெருவில் தார்ச்சாலை இல்லை. அங்கு உள்ள மண்சாலை மேடும், பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையின் வழியாக மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த சாலை வழியாக அத்திக்கடை, கொரடாச்சேரி, பொதக்குடி, பாலக்குடி போன்ற ஊர்களுக்கு செல்ல முடியும். மழைகாலங்களில் மண்சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்சாலைக்கு பதிலாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், மேலராதாநல்லூர்.