சாலையோரம் காரை நிறுத்தியது தொடர்பாக தகராறு: பழைய இரும்பு கடைக்காரருக்கு கத்திக்குத்து லாரி டிரைவர் கைது
சாலையோரம் காரை நிறுத்தியது தொடர்பாக தகராறு: பழைய இரும்பு கடைக்காரருக்கு கத்திக்குத்து லாரி டிரைவர் கைது
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் சாலையோரம் காரை நிறுத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பழைய இரும்பு கடைக்காரரை கத்தியால் குத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தகராறு
பெங்களூரு பி.டி.எம். லேஅவுட் சோமேஸ்வரா காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது46). இவர் பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை இவர் தேன்கனிக்கோட்டைக்கு காரில் வந்தார். அங்கு கோட்டைவாசல் பகுதியில் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு காய்கறிகள் வாங்க சென்றார்.
அப்போது தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சீனிவாசன் (43) என்பவர் அங்கு வந்தார். அவர் எதற்காக சாலையில் காரை நிறுத்தி உள்ளீர்கள் என்று ரமேசிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் தான் வைத்திருந்த கத்தியால் ரமேசின் வயிறு மற்றும் இடது கை பகுதியில் குத்தினார்.
லாரி டிரைவர் கைது
இதில் காயம் அடைந்த ரமேஷ் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தார். அவர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.