ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; திண்டுக்கல் டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே பரபரப்பு

திண்டுக்கல் டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-02-07 17:04 GMT
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏ.டி.எம். எந்திரம்
திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடியில் டி.ஐ.ஜி. அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்குள்ள எந்திரத்தை போலீசார் மற்றும் அந்த பகுதியில் வசிப்பவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர் ஒருவர் நேற்று காலை வந்தார். அப்போது அங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர், இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை முயற்சி
விசாரணையில், சீலப்பாடியில் உள்ள ஏ.டி.எம். மையத்தை கண்காணிக்க இரவு நேரத்தில் காவலாளி நியமிக்கப்படவில்லை. இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், முதலில் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவின் கேபிள் வயரை துண்டித்தனர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு சாலையில் ஆள்நடமாட்டம் இருந்ததை கண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர் என்பது தெரியவந்தது.
பரபரப்பு
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே ஏ.டி.எம். மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்