புவனகிரி பேரூராட்சி 1944-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 1982-ம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பேரூராட்சி ராகவேந்திரர் பிறந்த தலமாக உள்ளது. புவனகிரியில் உள்ள ராகவேந்திரர் கோவில் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்குள்ள 18-வது வார்டில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.
குடிநீர் பிரச்சினை
மேலும் இங்கு அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு கால்நடை மருத்துவமனை, புவனகிரி தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளன. புவனகிரி பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகளை கொண்டதாகும். புவனகிரி பேரூராட்சியாக இருந்தும் இங்கு ஒரு தீயணைப்பு நிலையம் கூட இல்லை.
புவனகிரி பேரூராட்சியில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இங்கு கிடைக்கும் குடிநீர் அனைத்தும் உப்புநீராக உள்ளது. அதாவது வெள்ளாறு வழியாக கடல்நீர் ஊருக்குள் புகுந்து நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. அதனால் உப்புநீர் ஊருக்குள் புகுவதை தடுக்க, புவனகிரி வெள்ளாறு பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
வேலைவாய்ப்பு
மேலும் புவனகிரி பகுதி மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வசதியாக எந்தவித தொழில்பேட்டையும் இல்லை. இதனால் பலர் வேலை தேடி வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர். இதுதவிர இப்பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் புவனகிரி பேரூராட்சியில் 8 ஆயிரத்து 825 ஆண் வாக்காளர்களும், 9 ஆயிரத்து 204 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும் என மொத்தம் 18 ஆயிரத்து 32 வாக்காளர்கள் உள்ளனர்.
தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தாங்கள் பேரூராட்சி தலைவராக வந்தால், பேரூராட்சிக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதிகளை கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
கடந்த முறை நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த வள்ளி சச்சிதானந்தம் வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக பதவி வகித்தார். துணை தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம்குமார் இருந்தார். அதனால் இந்த முறையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, பேரூராட்சி தலைவர் பதவியை அலங்கரிக்க முயற்சி செய்கிறது. மேலும் ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.