புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி
புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி
ஊட்டி
ஊட்டி அருகே புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
புலி நடமாட்டம்
நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட கடநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இங்குள்ள கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த கிராமங்களை ஒட்டி உள்ள இடங்களில் புலி நடமாடுவதோடு கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி இழுத்து செல்கிறது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
மேலும் அவர்கள் தோட்டங்களுக்கு சென்று வர முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டனர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இரவு நேரங்களில் குடியிருப்புகளை விட்டு தோட்டங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வீடியோ வைரல்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடலூர், மசினகுடியில் புலி தாக்கி 4 பேர் இறந்தனர். அந்த புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
இதனால் கடநாடு கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் புலி நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் நேற்று நீலகிரி வன கோட்ட அலுவலர் சச்சினிடம், கடநாடு கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
10 கேமராக்கள்
கடநாடு, காவிலோரை, ஆடலட்டி, ஒடயரட்டி, மாவுக்கல், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் புலி நடமாடி வருகிறது. விவசாய தோட்டங்கள் மற்றும் கூலி வேலைகளுக்கு சென்று வரும் மக்கள் நேரில் பார்த்ததால் அச்சமடைந்து உள்ளனர். எனவே கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆவன செய்வதோடு, கூண்டு வைத்து புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கடநாடு பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 10 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றனர்.