கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா போராட்டம்

கோர்ட்டு உத்தரவின்படி கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-02-07 12:41 GMT
வரதட்சணை கொடுமை

சென்னை தாம்பரம் அடுத்த படப்பையைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 27). இவருக்கும், நாவலூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சதீஷ் (33) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சதீஷ், நாவலூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

திருமணத்தின்போது ஜெயஸ்ரீயின் பெற்றோர், 40 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.ஆனாலும் சதீஷின் பெற்றோர், கூடுதல் வரதட்சணையாக மேலும் ரூ.2 லட்சம், ஒரு கார், வெள்ளியால் ஆன வீட்டு உபயோக பொருட்கள் கேட்டு ஜெயஸ்ரீயை கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கோர்ட்டு உத்தரவு

இதனால் விரக்தி அடைந்த ஜெயஸ்ரீ, இது தொடர்பாக தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தும், சதீசை கைது செய்யாமல் இருந்தனர்.

இதற்கிடையில் சதீஷ், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். திருமணமாகி 7 மாதங்களே ஆகி இருப்பதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, இரு தரப்பையும் போலீஸ் நிலையத்தில் வைத்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

தர்ணா போராட்டம்

கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி ஜெயஸ்ரீ தரப்பினர் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த ஜெயஸ்ரீ, திடீரென தாம்பரம் போலீஸ் நிலையம் முன்பு தனது பெற்றோருடன் தர்ணா போராட்டம் நடத்தினார். தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் சமாதானம் அடைந்த ஜெயஸ்ரீ போராட்டத்தை கைவிட்டார்.

மேலும் செய்திகள்