பெரிய வாளவாடி குட்டை ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது
பெரிய வாளவாடி குட்டை ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது
பெரிய வளவாடி குட்டை ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது எப்போது? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மழை நீர் குட்டை
மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை தேக்கி வைத்து நிலத்தடி நீர் இருப்பை உயர்த்துவதில் நீராதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முறையாக கடைபிடிக்கப்பட்டு வந்த நீர்மேலாண்மை மற்றும் நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் பராமரிப்பு காலப்போக்கில் மறைந்துவிட்டது. இதை சாதகமாகக்கொண்ட ஒரு சில நபர்கள் நீராதாரங்கள் அவற்றின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர்.
அந்த வகையில் பெரியவாளவாடி கிராமத்தில் உள்ள குளம் ஒன்று தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பெரிய வாளவாடி கிராமத்தை சுற்றியுள்ள கிணறு, ஆழ்குழாய்கிணறு, மற்றும் ஊர் பொது கிணறுகளுக்கு ஆதாரமாக 6.33 ஏக்கர் பரப்பளவில் குட்டை அமைந்துள்ளது. இந்த குட்டைக்கு அருகில் உள்ள நபர்கள் அதில் படிப்படியாக ஒரு ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி வந்தனர். இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து குட்டையில் அளவீடு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?
இதையடுத்து குட்டையில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி உடுமலை தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வரைபடத்துடன் கடிதம் அளித்தார். அதை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுவரையிலும் நடவடிக்கை எடுத்து குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு முன்வரவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட நீர்வரத்தை முழுவதுமாக குட்டையில் தேக்கி வைக்க முடியாமல் வீணாகி போனது. எனவே பெரியவாளவாடி குட்டையில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.