பாண்டிபஜாரில் அடுக்குமாடி வணிக வளாகத்தில் தீ விபத்து; இணை இயக்குனர் பிரியா ரவிசந்திரன் நேரில் ஆய்வு

சென்னை பாண்டிபஜாரில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் உள்ள துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட இடத்தை இணை இயக்குனர் பிரியா ரவிசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-02-07 10:07 GMT
அடுக்குமாடி வணிக வளாகம்

சென்னை பாண்டிபஜார் தியாகராயர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி வணிக வளாகத்தில் பிரபல தனியார் வங்கி, துணிக்கடை, நகைக்கடை, ஜெபக்கூடம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜெபக்கூடத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் பாண்டி பஜார் பகுதியில் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் அந்த வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள துணிக்கடையில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்துக்குள் அந்த கரும்புகை தீயாக மாறி கடை முழுவதும் பரவியது. துணிக்கடையில் இருந்த கண்ணாடிகள் வெப்பத்தின் தாக்கத்தால் உடைந்து தீ வெளியே கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் வணிக வளாகத்தின் உள்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் ஜெபக்கூடத்தில் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். சின்னத்திரை நடிகர் ஸ்ரீகுமாரும் உள்ளே மாட்டிக்கொண்டார். உடனடியாக இதுபற்றி அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

தகவல் அறிந்ததும் தியாகராய நகர், தேனாம்பேட்டை, அசோக்நகர், கிண்டி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், துணிக்கடையில் எரிந்த தீயை அணைத்தனர். தீ மற்ற கடைகளுக்கும், ஜெபக்கூடத்துக்கும் பரவாமல் தடுத்தனர். பின்னர் ஜெபக்கூடத்தில் இருந்த சிலரை ‘ஸ்கை லிப்ட்’ எனப்படும் ராட்சத ஏணிப்படி எந்திரம் உதவியுடனும், தீயணைப்பு வீரர்கள் படிகளில் ஏறிச்சென்றும் பத்திரமாக மீட்டனர்.

இதனால் பரபரப்பாக காணப்படும் தியாகராயநகர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இணை இயக்குனர் ஆய்வு

இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகத்தை தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் கண்ணன் உடனிருந்தார்.

பின்னர் நிருபர்களிடம் இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் கூறியதாவது:-

வணிக வளாகத்தில் உள்ள துணிக்கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து விட்டனர். புகை மண்டலத்தை கட்டுப்படுத்தி வணிக வளாகத்தின் உள்ளே சிக்கி இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்