நாகர்கோவிலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கைதானவரை விடுதலை செய்யக்கோரி நாகர்கோவிலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-02-06 22:16 GMT
நாகர்கோவில்:
கைதானவரை விடுதலை செய்யக்கோரி நாகர்கோவிலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்
நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியை சோ்ந்தவர் நிஷாந்த் (வயது 19). இவர், தனது நண்பர்களான தனுசன்(24) மற்றும் 17 வயது சிறுவனுடன் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் வெள்ளாடிச்சி விளையில் இருந்து புறப்பட்டார். 
இடலாக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி முன் மோட்டார் சைக்கிள் வந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் நிஷாந்த் உள்பட 3 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். 
கைது
இந்த நிலையில் நிஷாந்த் கோட்டார் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், விபத்து நடந்த இடத்தில் 5 பேர் கொண்ட கும்பல் தன்னை(நிஷாந்த்) தாக்கியதாக கூறியிருந்தார். அதன் பேரில் கண்டல் தெரியும் நபர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
இடலாக்குடியை சோ்ந்த சபிக்(40) என்பவரை கைது செய்தனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆவார்.
சாலை மறியல்
இதுபற்றி தகவல் அறிந்ததும், சபிக்கை விடுதலை செய்ய கோரி நேற்று இடலாக்குடி சந்திப்பில் அவர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் சத்தார் அலி, மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன், பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமது ஜஸ்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உடனே நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், கண்மணி ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு காணப்பட்டது. சாலை மறியலால் நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்