உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல்
உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் குரும்பலூர் பேரூராட்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் தனி தாசில்தாருமான பழனிசெல்வன் தலைமையில் மருவத்தூர் போலீஸ் ஏட்டுகள் கண்ணன், கீதா ஆகியோர் நேற்று காலை பெரம்பலூர்-துறையூர் சாலையில் குரும்பலூர் அருகே ஈச்சம்பட்டியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த காரில் இருந்தவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் குன்னம் தாலுகா, காடூர் தெற்கு தெருவை சேர்ந்த நல்லதம்பி (வயது 45) என்பதும், காரில் இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மெர்சியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டதாக மொத்தம் ரூ.55 லட்சத்து 16 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.