மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி
சமயபுரம் அருகே ஒலிபெருக்கி கட்டியபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
சமயபுரம்
சமயபுரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நெய்க்குப்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவர் வீட்டிலேயே ஒலிபெருக்கி சாதனங்களை வைத்து விசேஷங்களுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது மகன் பகவத் (வயது 20). இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறை நாட்களில், தந்தைக்கு உதவியாக ஒலிபெருக்கி வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தனது வீட்டின் எதிர்புறத்தில் உள்ள வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு ஒலிபெருக்கி சாதனங்களை கட்டிக் கொண்டிருந்தார்.
மின்சாரம் பாய்ந்து பலி
அப்போது, எதிர்பாராதவிதமாக பகவத் மீது மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு புதூர் உத்தமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.