காதலுக்கு பெற்றோர் எதிப்பு தெரிவித்ததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை - காதலியும் விஷம் குடித்து உயிரை மாய்த்த சோகம்
மலவள்ளி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார். இதையறிந்து காதலியும் விஷம் குடித்து உயிரை மாய்த்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ஹலகூர்:
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஆளதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஷசாந்த்(17). இதேபோல் சொட்டனஹள்ளி கிராமத்தில் மைனர் பெண் ஒருவர் வசித்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் மலவள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யு.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது. அதன்படி 2 பேரும் உயிருக்கு, உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால் காதல் ஜோடி மனமுடைந்து காணப்பட்டது.
வாலிபர் தற்கொலை
இந்த நிலையில் நேற்று மாலை ஷசாந்த் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்து காதலி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மைனர் பெண்ணும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை, குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
காதலியும் சாவு
ஆனாலும் சிகிச்சை பலனின்றி மைனர் பெண் இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த மலவள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், காதலுக்கு பெற்றொர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபரும், அதையறிந்து காதலியான மைனர் பெண்ணும் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மலவள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.