வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் மற்றும் போலீசார் நேற்று நெல்லை அருகே உள்ள பொன்னாக்குடி பாலம் அருகே சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு வீட்டில் 70 மூட்டை ரேஷன் அரிசி 3 ஆயிரத்து 500 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த கொம்பையா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
இந்தநிலையில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த பகுதியில் உள்ள ரைஸ்மில் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். அதில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.