நதியில் மூழ்கி தாய்-மகன் சாவு

நீச்சல் கற்றுக்கொடுத்த போது நதியில் மூழ்கி மகனுடன், தாயும் பலியானார்.

Update: 2022-02-06 19:30 GMT
தலைவாசல்:-
நீச்சல் கற்றுக்கொடுத்த போது நதியில் மூழ்கி மகனுடன், தாயும் பலியானார்.
தலைவாசல் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
செங்கல் சூளையில் வேலை
சேலம் மாவட்டம் பெரிய வீராணம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருடைய மனைவி பபிதா (வயது 28). இவர்கள் இருவரும் வீரகனூர் அருகே சொக்கனூரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு அனுஸ்ரீ (13), ஆகாஷ் (8) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அம்மாபேட்டையில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் வினோத் தனது குடும்பத்துடன் தலைவாசல் அருகே வீரகனூர் சுவேத நதிக்கு சென்றார். அங்குள்ள மருதையன் கோவில் அணைக்கட்டு பகுதியில் மாலை 4 மணி அளவில் பபிதா தன்னுடைய 2 குழந்தைகளுடன் குளித்துக் கொண்டிருந்தார்.
தண்ணீரில் மூழ்கி பலி
அப்போது பிள்ளைகளுக்கு நீச்சல் கற்று கொடுத்ததாக தெரிகிறது. திடீரென 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினோத், உடனே தண்ணீருக்குள் குதித்து மகள் அனுஸ்ரீயை காப்பாற்றினார். மேலும் தன்னுடைய மனைவி, மகனை காப்பாற்ற முயன்றார். அதற்குள் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கி பலியாகினர். வினோத் அவர்களை தண்ணீருக்குள் தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அவர் கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஓடி வந்து தாயையும், மகனையும் தேடினர். தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்தனர். தண்ணீரில் மூழ்கிய பபிதா, அவருடைய மகன் ஆகாஷ் ஆகிய இருவரது உடலையும் மீட்டனர். இதுகுறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கணவன் கண்முன்னே தண்ணீரில் மூழ்கி மனைவியும், குழந்தையும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்