விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-02-06 18:03 GMT
விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்றது. பஞ்ச பூதங்களை மையமாக கொண்டு பல்வேறு சிறப்புகளை விளக்கும் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றது.
பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர் கோவிலின் 5 கோபுரங்கள், கோவிலை சுற்றியுள்ள தெருக்கள் என எங்கும் மின்னொளியில் ஜொலித்தன. மேலும் சன்னதி வீதி மற்றும் நான்கு கோட்டை வீதிகள், விருத்தாசலம் மணிமுத்தாறு பாலம், பாலக்கரை ஆகிய இடங்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாழை மரங்கள் கட்டப்பட்டு பக்தர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனால் விருத்தாசலம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

யாகசாலை பூஜை தொடக்கம்

மேலும் கோவில் வளாகத்தில் 9 அக்னி ஹோம குண்டங்கள், 2 பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், 35 ஏகா அக்னி குண்டங்கள் உள்ளிட்ட 81 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு 1300 கலசங்கள் அமைத்து பூஜிக்கும் வகையில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 27-ந்தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. பின்னர் கடந்த 2-ந் தேதி காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் முடிவடைந்தவுடன் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்காக யானை மீது வைத்து தீர்த்தம் கொண்டு வந்தனர். 

தொடர்ந்து 3-ந்தேதி மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. யாகசாலை பூஜையை திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

மகா கும்பாபிஷேகம்

பின்னர் 4-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜை, நேற்று முன்தினம் 4, 5-ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. 
தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காலை 8 மணியளவில் கோவில் மூலவர், ராஜ கோபுரங்கள், பரிவார தெய்வங்கள், கொடி மரம் என அனைத்து கோபுர கலசத்திற்கும் ஒரே நேரத்தில் புனித  நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூல மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது விழாவில் கலந்து கொண்ட, சிவாச்சாரியார்கள், பக்தர்கள் ஓம் நமசிவாய என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பி பயபக்தியுடன் சாமிதரிசனம் செய்தனர். 

ஹெலிகாப்டர் மூலம்...

இதற்கிடையே கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன் மலர் தூவுவதற்காக கொண்டு வரப்பட்ட ஹெலிகாப்டர் வானுயர பறந்து கோவிலை 3 முறை வலம் வந்தது. தொடர்ந்து 5 கோபுரங்கள் மற்றும் விமானங்கள் மீதும், 4 கோட்டை வீதிகள், விருத்தாசலம் மணிமுக்தாறு, பாலக்கரை ஆகிய இடங்களில் வானில் இருந்தவாறு கும்பாபிஷேகத்தை தரிசித்த பக்தர்கள் மீதும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. மேலும் நவீன எந்திரங்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 
கும்பாபிஷேக விழாவில் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அமைச்சர்கள் சி.வெ.கணேசன், சிவசங்கரன், கும்பாபிஷேக குழு தலைவரும், விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளருமான அகர்சந்த், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், உதவி ஆணையாளர் பரணிதரன், செயல்அலுவலர் முத்துராஜா, எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், சபா.ராஜேந்திரன் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
மேலும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மாசி மக பிரம்மோற்சவம்

தொடர்ந்து மாலையில் மகா அபிஷேகம் மற்றும் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். 
இந்த நிலையில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் மாசிமக பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறுகிறது. 

மேலும் செய்திகள்