குபேரன் வழிபட்ட தலமான தஞ்சபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
குபேரன் வழிபட்ட தலமான தஞ்சபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
தஞ்சாவூர்:-
தஞ்சை வெண்ணாற்றங்கரையில் குபேரன் வழிபட்ட தலமானதஞ்சபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சபுரீஸ்வரர் கோவில்
தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் பிரசித்தி பெற்ற தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களில் இந்த கோவில் ஒன்றாகும். இக்கோவிலில் சிவன் மேற்கு நோக்கி வீற்றிருப்பது தனி சிறப்பாகும். அதுமட்டுமின்றி குபேரன் இலங்கையை ஆட்சி செய்து வந்தபோது தனது செல்வங்களை ராவணனிடம் இழந்ததாக கூறப்படுகிறது.
இழந்த செல்வங்களை மீட்பதற்காக குபேரன் தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டதாகவும், சிவனின் அருளால் இழந்த செல்வங்களை ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் திரும்ப பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவில் குடமுழுக்கு கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்றது.
யாகசாலை
இந்த நிலையில் குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி கடந்த மாதம் 31-ந் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 1-ந் தேதி மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், 2-ந் தேதி சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து 3-ந் தேதி இரவு 8 மணிக்கு முதல் கால யாக பூஜை தொடங்கியது. 4-ந் தேதி காலை 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜையும், நேற்று முன்தினம் 4-ம் கால யாக பூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றன.
குடமுழுக்கு
நேற்றுகாலை 5.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், 7.30 மணிக்கு திருக்கடங்கள் புறப்பாடும், 9.30 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள் குடமுழுக்கும், 10 மணிக்கு தஞ்சபுரீஸ்வரர், ஆனந்தவல்லி அம்மன் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கும், 10.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.