புத்தகம் படிப்பதால் பல்வேறு நல்ல செய்திகளை கற்க முடியும்

புத்தகம் படிப்பதால் பல்வேறு நல்ல செய்திகளை கற்க முடியும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.

Update: 2022-02-06 15:39 GMT
திருவாரூர்:
புத்தகம் படிப்பதால் பல்வேறு நல்ல செய்திகளை கற்க முடியும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். 
நூலகம் திறப்பு 
பின் தங்கிய கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் திறக்க திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக போலீஸ் துறை சார்பில் நூலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் திருவாரூர் அருகே அகரதிருநல்லூர் கிராமத்தில் நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் திறந்து வைத்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
பொது அறிவு திறனை வளர்த்து கொள்ள
போலீஸ்துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள நூலகமானது இப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இங்கு சிறியவர்கள் படிக்கக்கூடிய வகையில் படங்களுடன் கூடிய கதை புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. புத்தகம் படிப்பதால் பல்வேறு நல்ல செய்திகளை கற்க முடியும். வேலை வாய்ப்பு, உயர்கல்வி போன்ற தேர்வுக்கான பொது அறிவு திறனை வளர்த்து கொள்ள புத்தகம் வாசிப்பது உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நூலக வளாகத்தில் மரக்கன்றுகளை போலீஸ் சூப்பிரண்டு நட்டார்.  பின்னர் அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

மேலும் செய்திகள்