கோத்தகிரி
இந்திய அரசு நிறுவனமான தாயகம் திரும்பியோர் கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கியின் 13-வது பிரதிநிதித்துவ பேரவைக்கு தமிழகம் முழுவதும் உள்ள 35 தொகுதிகளில் இருந்து 150 பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அதன்படி கோத்தகிரி மாதா கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் காலை 9 மணிக்கு தேர்தல் தொடங்கியது.
தேர்தல் அதிகாரி நரசிம்மன் மேற்பார்வையில் கோத்தகிரியில் 3 பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கோத்தகிரி தாயகம் திரும்பியோர் வங்கியில் 5 ஆயிரத்து 220 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு வாக்குச்சாவடி மட்டுமே அமைக்கப்பட்டு இருந்த நிலையில், கூட்டம் அதிகமானதால் கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டதுடன் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் மாலை 6 மணி வரை 1,300 பேர் மட்டுமே வாக்களிக்க முடிந்தது.
பலர் வாக்களிக்க முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். டோக்கன் வழங்கியவர்களுக்கு இரவு 10 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தலை கோத்தகிரி தாசில்தார் காயத்ரி நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.