ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணம் இன்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற தேர்தல் விதிமீறல் நடைபெறுகிறதா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறக்கும் படையினர் உள்ளாட்சி அமைப்புகளில் சுழற்சி முறையில் வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரியில் இதுவரை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.20 லட்சத்து 88 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும் கட்சி கொடிகள் அகற்றப்படாமல் உள்ளதாக புகார் வந்தது. தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று கட்சி கொடிகளை அகற்றினர்.