வாக்குப்பதிவுக்கான பொருட்கள் சரியாக உள்ளதா

ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்கான பொருட்கள் சரியாக உள்ளதா? என்று தேர்தல் அலுவலர் காந்திராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2022-02-06 14:04 GMT
ஊட்டி

ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்கான பொருட்கள் சரியாக உள்ளதா? என்று தேர்தல் அலுவலர் காந்திராஜ் ஆய்வு செய்தார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்காக மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பரிசீலனை செய்யப்பட்டு, 22 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆணையாளர் ஆய்வு

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரிவு மூலம் 15 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இது தவிர வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் பொருட்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வெளியே வாங்கி சேகரித்து வருகின்றன. 

ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பொருட்கள் ஒரு அறையில் தனியாக வைக்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளரும் காந்திராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் உள்ளதா, 8 மண்டலம் வாரியாக பிரித்து கொடுப்பதற்கு தேவையான பொருட்கள் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். 

80 பொருட்கள்

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, அழியாத மை குப்பிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவு செய்யும் இடத்தில் உள்ளே, வெளியே போன்ற இடங்களை குறிக்கும் குறியீடுகள், பென்சில், குண்டூசிகள், முத்திரை அரக்கு, கித்தான் பை, ஆண், பெண் உள்பட அனைத்து வாக்காளர்களை குறிக்கும் போஸ்டர்கள், மெழுகுவர்த்திகள், சணல் கயிறு, வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சி புத்தகம், மறைவு அட்டை உள்பட 80 பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 

இந்த பொருட்களை சேகரித்து மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடி வாரியாக பிரித்து கொடுப்பதற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்