நடைபாதையை விரைவாக சீரமைக்க வேண்டும்
சாக்கடை கால்வாய் குழாயை சரி செய்து நடைபாதையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி
சாக்கடை கால்வாய் குழாயை சரி செய்து நடைபாதையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குழாயில் அடைப்பு
ஊட்டி கமர்சியல் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் இருந்து நடைபாதை ஒரு அடி உயரம் உயர்த்தி இன்டர்லாக் கற்கள் பதித்து கட்டப்பட்டது. இந்த நடைபாதைக்கு அடியில் சாக்கடை கழிவுநீர் செல்ல குழாய்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் கழிவுநீர் சென்று கோடப்பமந்து கால்வாயில் சேகரமாகிறது.
இதற்கிடையே குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் கமர்சியல் சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் வழிந்தோடியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும்போது மூக்கை பொத்தியபடி சென்றனர்.
பொதுமக்கள் அவதி
இதைதொடர்ந்து நடைபாதை அடியில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காக நடைபாதையில் இன்டர்லாக் கற்கள் அகற்றப்பட்டன. பின்னர் குழி தோண்டி அடைப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்யும் பணி நடந்தது. இன்டர்லாக் கற்கள் சாலையோரத்தில் வைக்கப்பட்டு உள்ளதோடு, தோண்டிய குழி அப்படியே இருக்கிறது.
இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேலும் அங்கு பழைய சாக்கடை குழாய்களை சரி செய்யாமல் புதிதாக பிளாஸ்டிக்கால் ஆன குழாய்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு வாரத்தை கடந்தும் முடிவடையாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக நடைபாதை உயர்த்தப்பட்டது. நன்றாக இருந்த நடைபாதை மீண்டும் பெயர்த்து எடுக்கப்பட்டதால் சிதிலமடைந்து காணப்படுகிறது. தோண்டிய குழி மூடப்படாமல் உள்ளதால் நடந்து செல்கிறவர்கள் தவறி குழிக்குள் விழும் அபாயம் உள்ளது.
மார்க்கெட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் உள்ளே செல்ல முடிவதில்லை. கமர்சியல் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதால் எதிரே வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, சாக்கடை கால்வாய் குழாய்களை சரி செய்து நடைபாதையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.