திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட 3-வது வார்டில் இருமுனைகுளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் அந்த பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஆழ்குழாய் கிணற்றில் அமைக்கபட்டிருந்த மின்மோட்டார் திடீரென மாயமானது. இதுகுறித்து செறுகோல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் மோட்டாரை திருடிச் சென்றது தெரியவந்தது. ஆனால், அவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் போலீசாரை கண்டித்தும், திருடியவர்களை உடனே கைது செய்ய வேண்டும், குடிநீர் வழங்கக் கேட்டும் குளத்தின் கரையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சிறிது நேரம் கழித்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.