மாணவிகள் பர்தா அணிந்து வரும் விவகாரம்; கர்நாடகத்தில் தலீபான் கல்வி முறையை அனுமதிக்க முடியாது - நளின்குமார் கட்டீல் ஆவேசம்

மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வரும் விவகாரத்தில் கர்நாடகத்தில் தலீபான் கல்வி முறையை அனுமதிக்க முடியாது என்று நளின்குமார் கட்டீல் ஆவேசமாக கூறினார்.

Update: 2022-02-05 21:08 GMT
பெங்களூரு:

நளின்குமார் கட்டீல்

  உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள ஒரு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அந்த மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  கர்நாடகத்தில் தலீபான் கல்வி முறையை அனுமதிக்க முடியாது. வகுப்பறையில் மாணவிகள் பர்தா அணிவதற்கு அனுமதி இல்லை. இந்த விஷயத்தில் எங்கள் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். பள்ளி நிர்வாகத்தின் விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். தலீபான் முறையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கல்வி கூடங்களுக்கு மதத்தை கொண்டுவருவது சரியல்ல. குழந்தைகள் தேவை கல்வி. பள்ளிகள் சரஸ்வதி கோவில்களை போன்றது. மாணவ-மாணவிகள் பள்ளியின் விதிமுறைகளை பின்பற்றி கல்வி கற்க வேண்டும்.
  இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.

இந்து கலாசாரம்

  பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., ‘‘பள்ளியில் சிலர் உள்நோக்கத்துடன் பர்தா அணிய அனுமதிக்குமாறு கேட்கிறார்கள். அதற்கு அனுமதி வழங்கினால் பிறகு பள்ளியில் மசூதி கட்டிவிடுவார்கள். இவ்வாறு கோரிக்கைகள் வந்து கொண்டே இருக்கும். அந்த மாணவிகளை ஆதரிப்பவர்கள் தான் உண்மையான துரோகிகள். இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்களை பகிரங்கப்படுத்த வேண்டும். கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்க சில சமூக விரோதிகள் முயற்சி செய்கிறார்கள்.

  இந்தியா இந்து கலாசாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளில் விநாயகருக்கு பூஜை செய்கிறார்கள். நெற்றியில் திருநீறு-குங்குமம் வைத்து வருகிறார்கள். அவர்களுக்கு(முஸ்லிம்கள்) ஏற்கனவே மத அடிப்படையில் பாகிஸ்தானை வழங்கியுள்ளோம். அங்கு அவர்கள் பர்தா அணிந்து வரலாம்’’ என்றார்.

நீதி வேண்டும்

  கலபுரகியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனீஷ் பாத்திமா தலைமையில் முஸ்லிம் மாணவ-மாணவிகள் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். தங்களுக்கு நீதி வேண்டும், அத்துமீறலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து சட்டசபையில் பிரச்சினை கிளப்புவேன் என்று அவர் கூறினார்.

  அதேபோல் உடுப்பியிலும் முஸ்லிம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் பர்தா அணிந்து பள்ளி-கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் பர்தா அணிந்து பள்ளிக்கு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்