ஈரோடு மாநகராட்சியில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட அ.தி.மு.க.- சுயேச்சை வேட்பாளர்கள் போராட்டம்; சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஈரோடு மாநகராட்சியில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-05 20:43 GMT
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பரிசீலனை
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற 490 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது.
ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டுக்கு சுயேச்சை வேட்பாளர் எம்.பிரபு வேட்புமனுதாக்கல் செய்து இருந்தார். இவர் ஏற்கனவே கடந்த மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக பணியாற்றி வந்தார். அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளராகவும் இருந்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இவர், அ.தி.மு.க.வில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தபோது, அவருடன் பிரபுவும் தி.மு.க.வில் சேர்ந்தார். அவர் இந்த முறை கவுன்சிலர் பதவிக்காக தி.மு.க.வில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. எனவே அதிருப்தி அடைந்த அவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.
மனு நிராகரிப்பு
நேற்று வேட்புமனு பரிசீலனையின் போது, பிரபு மாநகராட்சி கடையை வாடகைக்கு எடுத்து இருப்பதை காரணம் காட்டி தேர்தல் நடத்தும் அதிகாரி கவுரி வேட்புமனுவை நிராகரித்து தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த காரணத்தால் அதிருப்தி அடைந்த சுயேச்சை வேட்பாளர் பிரபு, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு முறை கையேடு உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்று தனது வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினார். ஆனால் அதிகாரிகள் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பிரபு அந்த அறையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பிரபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள்
இதற்கிடையே மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்ய கால தாமதம் ஆனதை சுட்டிக்காட்டி பிரபுவை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். ஆனால் பிரபு அலுவலகத்தில் உட்கார்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டுவர முயன்றனர். ஆனால், அவர் ஒத்துழைக்காததால் போலீசார் இழுத்துக்கொண்டே வெளியே வந்தனர்.
இந்தநிலையில் காசிபாளையம் 4-வது மண்டல அலுவலகத்தில் 41-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சாந்தி, 51-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் காஞ்சனா மற்றும் அவரது மாற்று வேட்பாளர் கலா மற்றும் சுயேச்சை வேட்பாளர் சங்கீதா ஆகியோரின் மனுக்களையும் தேர்தல் நடத்தும் அதிகாரி தள்ளுபடி செய்தார்.
பரபரப்பு
இதனால் அவர்களுடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அலுவலகத்தின் முன்னால் உள்ள சாலையில் உட்கார்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையில் இருந்து சற்று ஓரமாக உட்கார வைத்தனர். மாலைவரை அவர்கள் சாலை ஓரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் கவுன்சிலர் பிரபுவும், தனது மனு ஏற்றுக்கொள்ளும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என்று அலுவலக வளாகத்திலேயே உட்கார்ந்தார். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மொத்தம் 63 வேட்புமனுக்களில் 5 மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்தநிலையில் பிற்பகலில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் மண்டல அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுக்கள் நிராகரிப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கூறும்போது, ‘எங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான உரிய காரணங்களை எழுதி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் வேட்பு மனுக்களை ஏற்க வேண்டு்ம்’ என்றனர். அதைத்தொடர்ந்து ஆணையாளர் சிவக்குமார், வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான உரிய காரணங்களை எழுதி கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்டு வேட்பாளர்கள் மாலை 6.30 மணிஅளவில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்