31 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு-கலெக்டர் விஷ்ணு பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 31 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்.

Update: 2022-02-05 19:22 GMT
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 31 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி

நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள், களக்காடு, விக்கிரமசிங்கபுரம், அம்பை ஆகிய 3 நகராட்சிகளில் 69 வார்டுகள், 17 பேரூராட்சிகளில் 273 வார்டுகள் என மொத்தம் 397 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் 490 வாக்குச்சாவடிகள், நகராட்சி பகுதியில் 123 வாக்குச்சாவடிகள், பேரூராட்சி பகுதியில் 319 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 932 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

தற்போது பழையபேட்டை பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அங்கு கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாநகராட்சி பகுதியில் 491 வாக்குச்சாவடிகளும், மாவட்டத்தில் மொத்தம் 933 வாக்குச்சாவடிகளும் உள்ளன. 

குண்டர் சட்டம்

இந்த தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுவதற்கு 4 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 1, 3 என மொத்தம் 3 ஆயிரத்து 375 பேருக்கு 14 மையங்களில் முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. 2-வது கட்ட பயிற்சி 10-ந்தேதி நடக்கிறது.

மேலும் தேர்தலையொட்டி நெல்லை மாநகர பகுதியில் 6 பேரும், மாவட்ட பகுதியில் 25 பேரும் என மொத்தம் 31 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பல ரவுடிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

பறக்கும் படை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க 51 அலுவலர்கள் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

இதுதவிர வட்டார தேர்தல் பார்வையாளராக நெல்லை மாநகராட்சியில் ஒரு மண்டலத்திற்கு ஒருவர் என 4 பேர், ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு ஒருவர் என மொத்தம் 24 பேர், இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி கலெக்டர் என்ற நிலையில் வட்டார தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

புகார் தெரிவிக்க...

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை 18004258373 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் இதுவரை தேர்தல் தொடர்பாக 14 புகார் மனுக்கள் வரப்பெற்று அந்தந்த தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நகர்ப்புற உள்ளாட்சிகளில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமலில் இருக்கும். உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்களில் வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகளை பயன்படுத்தக்கூடாது. இதுதொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நோட்டா கிடையாது

நெல்லை மாவட்டத்தில் தேர்தலுக்கு போதுமான வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை நோட்டா கிடையாது. வாக்காளர் வாக்குச்சாவடிக்கு வந்த பின்னர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என தெரிவித்தால் இதை குறிப்பிட்ட படிவத்தில் பதிவு செய்து கையொப்பம் பெறப்படும். அதை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்