தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், முசிறி முதல் மணமேடு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் பள்ளங்களை மூட சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2-ந்தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக திருச்சி கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பணியாளர்கள் முசிறி முதல் மணமேடு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பள்ளங்களை சரிசெய்தனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், சரி செய்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
சரவணன், துறையூர், திருச்சி.
குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைகோவில் பகுதியில் கடந்த சில வாரங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரன், திருவெறும்பூர், திருச்சி.
மாடுகள்-பன்றிகள் தொல்லை
திருச்சி இரட்டைவாய்க்கால் பகுதிகளில் பகல் நேரங்களில் சாலைகளில் ஏராளமான மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
இதேபோல் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் , குண்டூர் பர்மா காலனியில் சில நாட்களாகவே பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குண்டூர் பர்மா காலனி. திருச்சி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சி பீமநகர் பகுதியில் ஹீபர் ரோடு பகுதியில் இடது புறம் குப்பைகள் ஏராளமாக குவிந்து கிடக்கிறது. மேலும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கால்நடைகள் அந்த குப்பைகளை கிளறி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி வட்டாரம் ஆலம்பாக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. மேலும் இங்குள்ள தெருக்களில் உள்ள வீடுகளின் முன்பு பொதுமக்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 1947-ம் ஆண்டு சுதந்திரம் வாங்கியபோது எந்த அளவு தெருக்கள் இருந்ததோ அதேபோல் தற்போது தெருக்களை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுப்பிரமணியன், ஆலம்பாக்கம், திருச்சி.