திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த வாலிபர், நண்பருடன் கைது
திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த வாலிபர், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்த வாலிபர், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண் உடல் மீட்பு
மும்பை வில்லேபார்லே பகுதியை சேர்ந்த விதவை பெண் கேத்ரீன். இவரது ஒரே மகள் கரோல் என்ற பிங்கி (வயது28). இவர் கடந்த மாதம் 24-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கேத்ரீன் சாந்தாகுருஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து பிங்கியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் பால்கர் பகுதியில் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில், அதுமாயமான பிங்கி என்பது தெரியவந்தது.
காதலி கொலை
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
இளம்பெண் பிங்கி வில்லேபார்லே பகுதியை சேர்ந்த சிக்கோ (27) என்ற வாலிபரை காதலித்து வந்து உள்ளார். எனினும் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று பிங்கியும், சிக்கோவும் மும்பை - ஆமதாபாத் சாலையில் ஸ்கூட்டரில் சென்று உள்ளனர். பால்கர் வகோபா காட் அருகே சென்றபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கடும் ஆத்திரம் அடைந்த சிக்கோ, காதலியை கழுத்தை நெரித்து உள்ளார். மேலும் மார்பில் கத்தியால் குத்தினார். இதில் இளம்பெண் உயிரிழந்தார்.
நண்பருடன் கைது
பின்னர் இது குறித்து சிக்கோ, நண்பர் குமார் தேவேந்திராவுக்கு (30) போன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து குமார் தேவேந்திரா அங்கு சென்றார். 2 பேரும் அடையாளம் தெரியாமல் இருக்க இளம்பெண்ணின் முகத்தை கல்லால் சிதைத்து உள்ளனர். பின்னர் உடலை அங்குள்ள மலைப்பகுதியில் வீசிவிட்டு வீடு திரும்பியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இளம்பெண்ணின் காதலன் சிக்கோ மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குமார் தேவேந்திராவை கைது செய்தனர். இதில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியை கொலை செய்ததாக சிக்கோ போலீசாரிடம் கூறியுள்ளார்.