கண்டாச்சிபுரம் அருகே வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கண்டாச்சிபுரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
கண்டாச்சிபுரம் தாலுகா டி.தேவனூரை அடுத்த வெள்ளப்புத்தூரை சேர்ந்தவர் பழனி மகன் விஜய் என்கிற அன்பு (வயது 22). ரவுடியான இவர் மீது அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக விஜயை அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் விஜயை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.
இதையடுத்து விஜயை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.