தேர்தலுக்கும், கொரோனா பாதிப்பு குறைந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை

தேர்தலுக்கும், கொரோனா பாதிப்பு குறைந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-05 17:25 GMT
கடலூர், 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை தந்தார். பின்னர் அவர், கொரோனா வார்டுக்குள் சென்று, அங்கு தொற்று பாதித்தவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தையும், ரத்த சுத்திகரிப்பு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

படுக்கை வசதி

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதில் மற்ற மாவட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும் மாவட்டமாக கடலூர் உள்ளது. 
தற்போது  கொரோனா 3-வது அலையில் கடலூரில் 27 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் கடந்த மாதம் 20 சதவீதமாக இருந்த பாதிப்பு விகிதம், தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் ஜனவரி மாதம் கொரோனா தொற்று அதிகரித்தது. ஆனால் அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. 

இறப்பு விகிதம்

ஆனால் தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
தேர்தலுக்கும், கொரோனா பாதிப்பு குறைந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை. கொரோனா 3-வது அலையில் பரவும் வைரசின் தன்மை வேகமாக உயர்ந்து, விரைவில் குறையும் தன்மை உடையது. அதனால் தான் தமிழகத்தில் மின்னல் வேகத்தில் உயர்ந்த பாதிப்பு, தற்போது வேகமாக குறைந்து வருகிறது. மாறாக கொரோனா பாதிப்பையும், இறப்பு விகிதத்தையும் குறைக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.

ஊக்கத்தொகை

மேலும் தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியது தொடர்பாக ரூ.110 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள், காவலாளிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா ஊக்கத் தொகை வழங்கப்படாதது குறித்து தற்போது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுத்தி ஊக்கத்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் மீரா, கண்காணிப்பாளர் சாய்லீலா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்