புலியூர் பேரூராட்சி ஒரு கண்ணோட்டம்

புலியூர் பேரூராட்சி ஒரு கண்ணோட்டம் பார்ப்போம்.

Update: 2022-02-05 16:57 GMT
கரூர்
புலியூர் பேரூராட்சி 
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியானது 9.68 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த பேரூராட்சி உள்ளாட்சி நிறுவனங்களின் ஆய்வாளர்கள் முடிவின்படி 1.7.1929-ம் ஆண்டு முதல் ஊராட்சியாக அமைக்கப்பட்டது.  
அதன் பிறகு ஊரக வளர்ச்சித்துறை உத்தரவின்பேரில் கடந்த 1.10.1977 அன்று முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பிறகு பேரூராட்சிகளின் இயக்குனர் உத்தரவுப்படி கடந்த 1.4.1984 அன்று முதல் தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 11.6.2004 அன்று முதல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சிறப்பு சிற்றூராட்சியாக மாற்றி அமைக்கப்பட்டது. பிறகு 14.7.2006 அன்று முதல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பேரூராட்சியாக மாற்றி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பதவி வகித்தவர்கள் 
 இந்நிலையில் கடந்த 1986-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காராள கவுண்டர் என்பவர் பேரூராட்சி தலைவராகவும்,1996-ம் ஆண்டு  முதல் கதிர்வேல் என்பவர் பேரூராட்சி தலைவராகவும், 2001-ம் ஆண்டு முதல் கிருஷ்ணன் என்பவர் பேரூராட்சி தலைவராகவும், 2006-ம் ஆண்டு தங்கவேல் என்பவர் பேரூராட்சி தலைவராகவும், 2011-ம் ஆண்டு தேர்தலில் அம்மையப்பன் என்பவர் பேரூராட்சி தலைவராகவும் பணியாற்றி வந்த நிலையில் அதன்பிறகு 2016 -ம் ஆண்டு முதல் இதுவரை தனி அலுவலர் பொறுப்பில் பேரூராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.  இந்த பேரூராட்சியில் புலியூர் வருவாய் கிராமம் என்ற வருவாய் கிராமத்தை உள்ளடக்கிய இந்த  பேரூராட்சி சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.  
இந்த பேரூராட்சியில் 4,105 குடியிருப்புகளும், 360 வணிக நிறுவனங்களும், 75 தொழிற்சாலைகளும் உள்ளன. இதில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,337 ஆண்களும், 6,383 பெண்களும் என மொத்தம் 12,720 பேர் வசித்து வருகின்றனர்.  இதில்  மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் ஆதிதிராவிட பெண்களுக்கு 2, 3, 9 என 3 வார்டுகளும், ஆதிதிராவிடர் (பொது) 1 மற்றும் 7 ஆகிய 2 வார்டுகளும், பெண்கள் (பொது) 6,11, 12, 13, 14  ஆகிய  5 வார்டுகளும்,  பொதுப்பிரிவினருக்கு 4, 5, 8, 10, 15 உள்ளிட்ட 5 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாள் கோரிக்கை
 கோவில்பாளையம், ஓடம் உடையார் பாளையம், சின்னம்ம நாயக்கன்பட்டி, காளிபாளையம், புரவிபாளையம், குளத்துப்பாளையம், கவுண்டன்பாளையம், வெள்ளாளப்பட்டி, வெடிக்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்த பேரூராட்சியில் தனியார் சிமெண்டு ஆலை ஒன்று இயங்கி வரும் நிலையில் கொசு வலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன. இதனையடுத்து விவசாய தொழிலே முக்கிய தொழிலாக இங்கு உள்ளது. 
இந்த பேரூராட்சியில் சேதாரம் ஆகும் கழிவுகளை 3.12 ஏக்கர் பரப்பளவில் மீட்பு பூங்கா என்ற பெயரில் அங்கு எடுத்துச்செல்லப்பட்டு மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகள் என தரம் பிரித்து அவற்றின் மூலம் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்கள் பலர் வேலை நிமிர்த்தமாக  கரூருக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.  இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்