இறந்த குட்டியை விட்டு பிரியாமல் அடம் பிடித்த தாய் யானை
இறந்த குட்டியை விட்டு பிரியாமல் அடம் பிடித்த தாய் யானை
வால்பாறை
வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகம் முத்துமுடி எஸ்டேட் முதல் பிரிவு தேயிலை தோட்ட பகுதியை ஒட்டிய இடத்தில் கடந்த மூன்று நாட்களாக ஒரு தாய் யானை குட்டியானையுடன் சுற்றித்திறிந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் குட்டியானை சோர்வுற்ற நிலையில் இருந்து வந்துள்ளது. மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் இந்த குட்டியானையை கண்காணித்து வந்தனர்.
நேற்று மாலையில் இந்த குட்டியானை தேயிலை தோட்ட பகுதியில் உள்ள சேறும் சகதியுமான இடத்தில் படுத்த நிலையில் இறந்து கிடந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் கணேசன், வனத்துறையின் கால்நடை அலுவலர் டாக்டர் சுகுமார் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து துணை களஇயக்குனர் கணேசன் தலைமையில் வனத்துறைகால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களால் குட்டியை நெருங்க முடியவில்லை. இறந்த குட்டியானையின் உடலின் அருகே தாய் யானை நின்று கொண்டே இருந்தது. வனத்துறையினர் தாய் யானையை அந்த இடத்திலிருந்து அருகில் உள்ள தேயிலை தோட்ட பகுதிக்கு விரட்டினர்.
ஆனால் அந்த யானை குட்டியை சுற்றியே வந்து, அங்கிருந்து செல்லாமல் அடம்பிடித்தது. வனத்துறையினரின் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை அங்கிருந்து அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இருப்பினும் அங்கிருந்து அந்த யானை குட்டியானையை பார்த்துக்கொண்டேயிருந்தது. இது தாயின் பாச போராட்டமாக இருந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் குட்டியானையின்அருகில் சென்று பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் சுகுமார் கூறுகையில், இறந்து கிடந்த 5 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டியானையின் வாய் மற்றும் துதிக்கை பகுதியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது.இந்த மாதிரியான அறிகுறிகள் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியிருந்தால் மட்டுமே ஏற்படும்.
எனவே இறந்த குட்டியானையின் ரத்த மாதிரியை கால்நடை மருத்துவ ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். பரிசோதனை முடிவு தெரிந்த பிறகு,குட்டியானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றார்.