5 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
நிலத்துக்கு இரைதேடி வந்த 5 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த நிம்மியம்பட்டு அருகில் உள்ள கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணாரெட்டி, விவசாயி.
இவரின் மகன் ரமேஷ் (வயது 46). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதில் அவர் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
மாலை நேரத்தில் மலைப்பகுதியில் இருந்து அவரின் விவசாய நிலத்துக்கு இரை தேடி ஏராளமான மயில்கள் வந்து செல்லும். மயில்கள் விவசாய நிலத்துக்கு வந்து மக்காச்சோள பயிரை சேதப்படுத்துவதாகக் கருதி, அதைக் கொல்வதற்காக அரிசியில் விஷத்தை கலந்து நிலத்தில் வைத்துள்ளார்.
வழக்கம்போல ஏராளமான மயில்கள் இரை தேடி அவரின் விவசாய நிலத்துக்கு வந்துள்ளன. விஷம் கலந்த அரிசியை மயில்கள் தின்றுள்ளன.
அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து மயில்கள் சுருண்டு கீழே விழுந்தன. அதில் 5 மயில்கள் சம்பவ இடத்திலேேய பலியாகி விட்டது.
உயிரிழந்த மயில்களை அவா் யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று புதைக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் யாரோ பார்த்து விட்டு ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் விரைந்து வந்து பலியான மயில்களை கைப்பற்றி ரமேசிடம் விசாரணை நடத்தினர். அவர், மயில்களை விஷம் வைத்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ரமேசை வனத்துறையினர் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர்.