பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருமங்கலம் நாடார் இளைஞர்-மாதர் சங்கம் சார்பில் பால்குட ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
இந்த பால்குட ஊர்வலம் திண்டுக்கல் பெரியகடை வீதியில் உள்ள நாடார் பேட்டை கருப்பணசாமி கோவிலில் இருந்து தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலம் 4 ரதவீதிகள் வழியாக சென்று கோட்டை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.
இதையடுத்து அங்கு கோட்டை மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோட்டை மாரியம்மன் கோவில் முன்மண்டபத்தில் மாதர் சங்கம் சார்பில் மாக்கோலம், பூக்கோலமிடப்பட்டது. மேலும் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் காப்பு, பூஜை, நெய்வேத்தியம் ஆகியவை நடத்தப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு படையல் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் கோவில் கலையரங்கில் நண்பர்கள் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் பூமண்டலம், உதவி செயலாளர் ரவீந்திரன், மாதர் சங்க செயலாளர் கற்பகம் ஜெகதீசன் மற்றும் கல்யாணி சோமசுந்தரம் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.