பெங்களூருவில் போராட்டம், ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க போலீஸ் கமிஷனருக்கு முழு அதிகாரம் - கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூருவில் போராட்டம், ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்க போலீஸ் கமிஷனருக்கு முழு அதிகாரம் வழங்கி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-02-04 20:48 GMT
பெங்களூரு:

அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

  பெங்களூரு சுதந்திர பூங்கா, மைசூரு வங்கி சர்க்கிள், அனந்தராவ் சர்க்கிள், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் இந்த போராட்டங்கள், ஊர்வலங்கள் நடைபெறுவதால், பெங்களூருவில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

  இந்த விவகாரம் கர்நாடக ஐகோர்ட்டுக்கும் சென்றது. இதையடுத்து, கர்நாடக ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படாத வண்ணம் பெங்களூருவில் போராட்டம், ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கவும், இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

போலீஸ் கமிஷனருக்கு அதிகாரம்

  இந்த நிலையில், கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், பெங்களூருவில் போராட்டம், ஊர்வலம் நடத்துவதற்கு பிற அமைப்புகள், சங்கங்கள், கட்சிகளுக்கு அனுமதி வழங்கவும், இநத விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவும் பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு முழு அதிகாரம் வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிட்டு இருக்கிறது.

  இதையடுத்து, பெங்களூருவில் போராட்டம், ஊர்வலம், பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்குவது, இதற்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் வகுப்பது குறித்து போலீஸ் கமிஷனர் விரிவாக ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க உள்ளார். மேலும் போராட்டம், ஊர்வலத்தில் ஈடுபடுபவர்கள் விதிமுறைகளை மீறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு முழு அதிகாரத்தை அரசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்