தலையில் கல்லை போட்டு சுமை தூக்கும் தொழிலாளி கொலை
திண்டுக்கல்லில், தலையில் கல்லை போட்டு சுமை தூக்கும் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
சுமைதூக்கும் தொழிலாளி
திண்டுக்கல் முத்தழகுபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் அருள் விசுவாசம் (வயது 40). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஸ்டீபன் (36), கொர செபஸ்தியார் (35).
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 3 பேரும் திண்டுக்கல் வடக்கு ரத வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது தகராறாக மாறியது.
தலையில் கல்லை போட்டு...
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆரோக்கிய ஸ்டீபன், கொர செபஸ்தியார் ஆகியோர் சேர்ந்து சாலையோரத்தில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அருள் விசுவாசத்தின் தலையில் போட்டனர். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அருள் விசுவாசம் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடக்கு போலீசார் விரைந்து சென்று அருள் விசுவாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆரோக்கிய ஸ்டீபன், கொர செபஸ்தியார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
அப்போது அருள் விசுவாசம் தினமும் மது குடிப்பதற்காக அவர் ஆரோக்கிய ஸ்டீபன் உள்பட 2 பேரிடம் இருந்தும் பணம் பறித்து வந்துள்ளார். அதன்படி நேற்று இரவும் அவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து அருள் விசுவாசத்தின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
முன்னதாக சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேரில் அங்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை பாராட்டினார். நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.