அடைக்கல அன்னை கையில் இருந்த ஜெபமாலை உள்பட 9 பவுன் நகைகள் திருட்டு
அடைக்கல அன்னை கையில் இருந்த ஜெபமாலை உள்பட 9 பவுன் நகைகள் திருட்டுபோயின.
கீழப்பழுவூர்:
நகைகள் திருட்டு
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி கிராமத்தில், வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல மாதா திருத்தலம் உள்ளது. இத்திருத்தலத்தில் புனித அடைக்கல அன்னை சொரூபத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட கிரீடம், கழுத்தில் தங்க நெக்லஸ், கையில் 2 ஜோடி தங்க வளையல் அணிவிக்கப்பட்டிருந்தது. கையில் தங்கத்தினாலான ஜெபமாலை ஒன்றும் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புனித அடைக்கல அன்னைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள், ஜெபமாலை உள்ளிட்ட சுமார் 9 பவுன் நகைகளை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார். இதையறிந்த கிறிஸ்தவ மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
இதுகுறித்து திருமானூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தேவாலயத்தின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் இரவு முககவசம், தொப்பி போட்டிருந்த மர்ம நபர், ஆலயத்தின் பின் பக்கத்தில் மேலே உள்ள ஜன்னல் வழியாக உள்ளே வந்து நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.