ஒரே நாளில் 124 பேர் வேட்புமனு தாக்கல்

ராமேசுவரம் நகராட்சியில் நேற்று ஒரே நாளில் 124 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Update: 2022-02-04 19:22 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் நகராட்சியில்  நேற்று ஒரே நாளில் 124 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ராமேசுவரம் நகராட்சி

ராமேசுவரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று குவிந்தனர்.
அ.தி.மு.க. சார்பில் 21 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் நகர செயலாளர் கே.கே.அர்ஜுனன், முன்னாள் நகர சபை தலைவர் அர்ஜுனன் ஆகியோர் தலைமையில் வேட்பாளர் அனைவரும் நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதேபோல் தி.மு.க. கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில் 21 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர செயலாளர் நாசர்கான் ஆகியோர் தலைமையில் ஆர்வமுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். இதைத்தவிர நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.

பணமாலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்

இதேபோல் சுயேச்சை பெண் வேட்பாளர் ஒருவர் பணத்தால் ஆன மாலைகளை அணிந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.ஆனால் மாலையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் போலீசார் அனுமதி கிடையாது என தெரிவித்ததால் மாலையை கழற்றி வைத்துவிட்டு வழக்கம்போல் வேட்பு மனு தாக்கல் செய்தார். பா.ஜனதா வேட்பாளர்கள், சுயேச்சைகளும் வேட்பு மனுக்கள் செய்தனர்.
கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் ராமேசுவரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் போட்டியிட 124 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதுவரை மொத்தம் 141 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி நாள் என்பதால் நகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்