செங்கல்சூளை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
மூதாட்டியை வெட்டிக்கொன்ற வழக்கில் செங்கல் சூளை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை:
மூதாட்டியை வெட்டிக்கொன்ற வழக்கில் செங்கல் சூளை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
செங்கல்சூளை உரிமையாளர்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வடமலைசமுத்திரத்தை சேர்ந்தவர் ஜான்ஜோசப் (வயது 45). இவர் செங்கல்சூளை நடத்தி வந்தார். மேலும் இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் உள்ளது.
இவரது தோட்டத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி சாவித்திரி (60) என்பவர் தனது மாடுகளை மேயவிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்ஜோசப் அந்த மாடுகளை பிடித்து அங்கு கட்டி போட்டுவிட்டார்.
வெட்டிக்கொலை
இதை அறிந்த சாவித்திரி 30-3-2015 அன்று அங்கு சென்று கட்டி போடப்பட்டு இருந்த மாடுகளை அவிழ்த்து வந்து விட்டார். இதுதொடர்பான தகராறில் மூதாட்டி சாவித்திரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து ஜான்ஜோசப், அல்போன்ஸ், கோட்டவிளைபட்டியை சேர்ந்த கணேசன், கீழக்கடையத்தை சேர்ந்த சங்கர் ஆகியோரை கைது செய்து நெல்லை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கை நீதிபதி ரவிசங்கர் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ஜான்ஜோசப்புக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அல்போன்ஸ், கணேசன், சங்கர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ராமமூர்த்தி ஆஜரானார்.