‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் அனுப்பன்குளம் பஞ்சாயத்து மீனம்பட்டி ரத்னபுரிநகர் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பொிதும் சிரமப்படுகின்றனர். சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிகுமார், அனுப்பன்குளம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை மாவட்டம் யாகப்பா நகர் பகுதியில் சிறியமழை பெய்தால்கூட சாலையில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
பிரபாகரன், மதுரை.
நேர காப்பாளர் தேவை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பஸ் நிலையத்தில் பஸ்களின் புறப்படும் நேரத்தை அறிய நேர காப்பாளர் இல்லை. வெளியூரில் இருந்து வரும் பயணிகள், முதியவர்கள் பஸ் புறப்படும் நேரத்தை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே நேர காப்பாளரை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகூர், கீழக்கரை.
குப்பைகள் அகற்றப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பஞ்சாயத்து ஆத்மசாமி நகரில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. மக்கள் சாலையோரம் குப்பைகளை வீசி செல்வதால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆதலால் குப்பைகளை அகற்றி குப்பை தொட்டி அமைத்து தர வேண்டும்.
பிரேம்குமார், ராமநாதபுரம்.
போக்குவரத்து நெரிசல்
மதுரை செல்லூர் முதல் ஆரப்பாளையம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. பள்ளி, கல்லூரி வாகனங்கள், வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பயணிப்பதால் வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாற்று பாதை அமைத்து சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
கோபால், செல்லூர்.
தேங்கி கிடக்கும் குப்பை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சமுசிகாபுரம், சத்திரப்பட்டி சாலை நெடுகிலும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இங்குள்ள கண்மாயிலும் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அருள், விருதுநகர்.
வேகத்தடை வேண்டும்
மதுரை திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா அருகே திருமங்கலம் செல்லும் வழியில் வேகத்தடை இல்லை. இ்ந்த வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் செல்கின்றன. ஒரு சிலர் வேகமாக செல்வதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே மேற்கண்ட சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
ஜோதி, திருப்பரங்குன்றம்
மூடப்படாத பள்ளம்
மதுரை திருவள்ளுர் காலனியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதன் ஆபத்தை அறியாத குழந்தைகள் அதன் அருகில் விளையாடுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளம் தெரியாமல் வாகனங்களை இயக்குவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்்கை எடுக்க வேண்டும்.
ரவி, மதுரை.